search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசுகள் விற்கவில்லை"

    சென்னை தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீபாவளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மொத்த விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்கே நடந்தது. #Diwali #Crackers #TheevuThidal
    சென்னை:

    பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கடும் கட்டுப்பாடு விதித்த காரணத்தால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பட்டாசு விற்பனை படுமந்தமாக காணப்பட்டது.

    சென்னை தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீபாவளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மொத்த விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்கே நடந்தது. 75 சதவீத பட்டாசுகள் விற்காமல் தேங்கிவிட்டது.

    தி.நகர், மயிலாப்பூர், வேப்பேரி, அண்ணாநகர், முகப்பேர், தாம்பரம், பழவந்தாங்கல், வேளச்சேரி பகுதிகளில் ஓரளவுக்கு விற்பனை நடந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வியாபாரம் குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து தீவுத்திடலில் பட்டாசு கடை வைத்திருக்கும் இஸ்மாயில் கூறுகையில், கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகையால் பட்டாசு தொழில் நலிந்தது. இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்குத்தான் நடந்துள்ளது.



    பட்டாசு தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து வருகிறது. இந்த தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்க்கை இனிமேல் கேள்விக்குறியாகி விடும்.

    திருவல்லிக்கேணி மொத்த வியாபாரி வி.பி. மணி கூறுகையில், தீபாவளிக்கு மழை பெய்யாத நிலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனை நடக்காதது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி வெடி வெடித்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்று போலீஸ் மிரட்ட தொடங்கியதால் பட்டாசு விற்பனை வெகுவாக பாதித்துவிட்டது. நிறைய கடைகளில் பட்டாசு கையிருப்பு உள்ளதால் அடுத்த ஆண்டு சிவகாசியில் அதிகம் பட்டாசு வாங்க மாட்டார்கள்.

    எனவே பட்டாசு விற்பனை பழையபடி நடைபெற, வேண்டுமானால் பட்டாசு வெடித்தால் மாசு வராமல் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களை கண்டறிய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வி.பி.மணி கூறினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

    பட்டாசு கடை போட்டவர்களுக்கு இந்த ஆண்டு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் பணம் போட்டு கடை நடத்தியவர்களுக்கு ரூ.2 லட்சம் அளவுக்குத்தான் வியாபாரம் நடந்துள்ளது. ரூ.20 லட்சம் முதலீட்டில் பட்டாசு கடை நடத்தியவர்கள் ரூ.10 லட்சம் கூட எடுக்க முடியாத சூழலில் உள்ளனர்.

    இதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, போலீஸ் மிரட்டல், தான் காரணம். அடுத்த ஆண்டு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

    சிவகாசியில் அடுத்த வருடம் உற்பத்தி வெகுவாக பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Crackers #TheevuThidal

    ×